விசாரணைக்கு அழைத்துச் சென்று திருட்டு வழக்கில் கைது செய்ததாகப் புகார் – திண்டுக்கல்லில் உறவினர்கள் திடீர் சாலை மறியல்!
திண்டுக்கல், 11 நவம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகேயுள்ள வன்னியபாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த வடமதுரை காவல்துறையினர், வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகக் கூ
Protest


திண்டுக்கல், 11 நவம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை அருகேயுள்ள வன்னியபாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன். இவரது வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த வடமதுரை காவல்துறையினர், வழக்கு ஒன்று தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

ஆனால், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜேஷ் கண்ணன் குறித்து மாலை வரை அவரது குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்தினர் கவலையடைந்த நிலையில், மாலையில் காவல்துறையினர் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது ராஜேஷ் கண்ணனைத் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளதாகவும், அவருக்குத் தேவையான ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் திருட்டு வழக்கில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், ராஜேஷ் கண்ணன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினர்.

இதனைக் கண்டித்து, திண்டுக்கல் திருமலைக்கனி சாலையில் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பேருந்துகளையும் சிறைபிடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உறவினர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் திருமலைக்கனி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / LOGESHWARI V