தமிழக வெற்றி கழகத்தின் 6 மாத ஆட்சி வேதனையான ஆட்சி – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
சேலம், 11 நவம்பர் (ஹி.ச.) சேலம் மாவட்டம் எடப்பாடி ஆய்வு மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்
Eps


சேலம், 11 நவம்பர் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் எடப்பாடி ஆய்வு மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதிகளில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான வாக்குறுதிகள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். கடந்த ஆறு மாதங்களில் மக்களுக்குப் பயனளிக்கும் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும்,

திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், ரீல்ஸை நம்பியே அரசு நிர்வாகம் நடைபெறுவதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை பரவலாக நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நிகழ்வதாகவும், காவல்துறையினரையே ரவுடிகள் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் பொதுமக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பிய அவர், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கவும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், எடப்பாடி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக அதிமுக நிர்வாகிகள் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை எனக் கூறியிருப்பது தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

காவிரி நடுவர் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 177.25 டிஎம்சி தண்ணீரைப் பெற்றுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தண்ணீர் பற்றாக்குறையால் குருவை, சம்பா சாகுபடிகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என விமர்சித்தார். இதனால் அரசின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்குத் தெளிவான தகவல்கள் கிடைப்பதில்லை என்றும் கூறினார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இதுவரை கண்டுபிடிக்காதது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

நகராட்சி, மாநகராட்சி மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசு அலுவலகங்களில் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.மேலும், விதிமீறல் காரணமாக 467 தொழிற்சாலைகள் மீது மூடுதல் மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தேவையான இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களைப் போல தற்போதைய அரசும் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V