மின்சாரக் கொள்முதலில் குறைந்த விலையில் மின்சாரம் பெற நடவடிக்கை – கேரள முதல்வர் அறிவிப்பு!
திருவனந்தபுரம், 11 நவம்பர் (ஹி.ச.) கேரளத்தில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் வகையில் புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு
Kerala cm


திருவனந்தபுரம், 11 நவம்பர் (ஹி.ச.)

கேரளத்தில் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்றும், குறைந்த விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் வகையில் புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

மின்சார வாரியம் சார்பில் மின்துறை அமைச்சர் மூலம் தனது பார்வைக்கு ஒரு கோப்பு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். அதில் மின்சாரக் கொள்முதலுக்காக இரண்டு விலைத் தேர்வுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

முதல் தேர்வில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.14.50 என்ற விலையிலும், மற்றொரு தேர்வில் ரூ.8.63 மற்றும் ரூ.8.90 என்ற விலையிலும் மின்சாரம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் விளக்கினார்.

மாநிலத்தில் உண்மையிலேயே மின்சாரப் பற்றாக்குறை உள்ளதா என்பது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விளக்கம் கேட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

அதற்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், எதிர்காலத்தில் சில சிக்கல்கள் உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

எனவே, தற்போதைய சூழலில் வேறு நிறுவனத்துடன் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான புதிய ஒப்பந்தத்தில் அவசரமாக ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்றார். செயற்கையான மின்சார நெருக்கடியை யாராலும் உருவாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறைக்கு, முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட இந்த ஆண்டு மின்சாரத் தேவை 1,000 மெகாவாட் அதிகரித்ததே முக்கியக் காரணம் என முதல்வர் விளக்கினார்.

முந்தைய அரசு நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாகத் திட்டமிடாமல், குறுகிய கால ஒப்பந்தங்களையே நம்பியிருந்ததாகவும் அவர் விமர்சித்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரத் தேவையைச் சமாளிப்பதற்கான திட்டமிடல் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்திலிருந்து எல் நினோ (El Niño) தாக்கம் ஏற்படக்கூடும் என்றும், இதனால் வறட்சி போன்ற சூழல் உருவாகி மின்சாரத் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கணிப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனை எதிர்கொள்ள குறுகிய கால மற்றும் நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, குறைந்த விலையில் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும், இதுவரை எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

ஒப்பந்தமோ அல்லது உத்தரவோ பிறப்பிக்கப்படாத நிலையில், அதிலிருந்து விலகுவது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V