Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி, 11 நவம்பர் (ஹி.ச.)
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின சமூக ஆர்வலர் நிஷா பகத் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மாநில அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள ஜார்க்கண்ட் பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷா தேவ், நிஷா பகத்தின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுவதாகக் கூறி வந்த முதல்வர் ஹேமந்த் சோரனின் அணுகுமுறை, நிஷா பகத்தின் மரண விவகாரத்தின் மூலம் கேள்விக்குள்ளாகியுள்ளதாக விமர்சித்தார்.
நிஷா பகத் உயிரிழப்பதற்கு முன்பு தனது ஃபேஸ்புக் நேரலைப் பதிவில் மாநில அரசு தனக்கு உரிய உதவிகளை வழங்கவில்லை என்றும், தனது பிரச்சினைகள் குறித்து அரசு அலட்சியம் காட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்ததாக பிரதுல் ஷா தேவ் தெரிவித்தார்.
மேலும், பிதௌரியா காவல் நிலையப் பொறுப்பாளர் (SHO), அஜய் திர்கே என்ற நிலத் தரகர் மற்றும் ஜோத்ஸ்னா என்ற நபர் ஆகியோர் மீது நிஷா பகத் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராகத் தான் மேற்கொண்டு வந்த பிரசாரத்தின் காரணமாகத் தனக்குத் தொடர்ந்து தொல்லைகள் அளிக்கப்பட்டதாகவும் நிஷா பகத் தனது வீடியோவில் தெரிவித்திருந்ததாக கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் ஏழு நாட்களாக மௌனம் காத்ததாக பிரதுல் ஷா தேவ் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து பாஜக சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும், மெழுகுவர்த்தி ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிதௌரியா காவல் நிலையப் பொறுப்பாளரையும் கைது செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
நிஷா பகத்தின் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, அவருக்கு நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் பிரதுல் ஷா தேவ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V