Enter your Email Address to subscribe to our newsletters

விசாகப்பட்டினம், 12 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கலாசார சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சி.ஐ.ஐ. மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆந்திர பெவிலியனை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பார்வையிட்டார்.
அவருடன் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரும் சென்றனர்.
அப்போது மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
குறிப்பாக திருப்பதி, விசாகப்பட்டினம், அமராவதி ஆகிய பொருளாதார மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், அமராவதி தலைநகர் மேம்பாட்டுத் திட்டங்கள், விசாகப்பட்டினத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து டிஜிட்டல் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர்.
இதைத்தொடர்ந்து பெவிலியனில் இடம்பெற்றிருந்த ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார கண்காட்சிகளை தலைவர்கள் பார்வையிட்டனர்.
பழங்குடியின மக்களின் ஓவியங்கள், தோல்பாவைக் கூத்து, பென் கலம்காரி உள்ளிட்ட கலைப்படைப்புகளை ஆர்வத்துடன் ரசித்தனர். அங்கிருந்த பழங்குடியின கலைஞர்களின் ஓவியங்களை பார்வையிட்ட பியூஷ் கோயல், சந்திரபாபு நாயுடு ஆகியோர் மாதிரி ஓவியங்களையும் வரைந்தனர்.
பின்னர் அரக்கு காபி அரங்குக்கு சென்ற பியூஷ் கோயல், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் பி.வி.என். மாதவ் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து அரக்கு காபியை ருசித்தனர்.
அப்போது அவர்கள் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
தொடர்ந்து மாநாட்டு வளாகத்தில் பியூஷ் கோயல், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பேட்டரி காரில் ஒன்றாக பயணம் செய்தனர். தலைவர்களின் இந்த சந்திப்பு மாநாட்டு வளாகத்தில் கவனம் ஈர்த்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA