Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 12 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளிமலை, மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அங்குள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வைகை ஆற்றின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான மூலவைகை ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் வருசநாடு, வாலிபாறை, தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லும் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், யாரும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ அல்லது ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA