ஆர்.டி.சி. ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் பொன்னம் பிரபாகர் எச்சரிக்கை
ஐதராபாத், 12 நவம்பர் (ஹி.ச.) தெலுங்கானாவில் அரசு போக்குவரத்துக்கழக (ஆர்.டி.சி.) ஊழியர்கள் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் க
A


ஐதராபாத், 12 நவம்பர் (ஹி.ச.)

தெலுங்கானாவில் அரசு போக்குவரத்துக்கழக (ஆர்.டி.சி.) ஊழியர்கள் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஆர்.டி.சி. ஊழியர்கள் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டால், அது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும். அதை விடுத்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. பயணிகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆர்.டி.சி.யின் கடமை என்றால், ஊழியர்களை பாதுகாப்பது பொதுமக்களின் பொறுப்பாகும்.

பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பஸ்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். மேலும், புதிய பஸ்கள் வாங்குவதற்கும், பஸ் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதற்கிடையே, நர்சம்பேட்டை ஆர்.டி.சி. பணிமனையில் டிரைவராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட சங்கர் கவுடின் குடும்பத்துக்கு அரசு அளித்த வாக்குறுதியின்படி, அவரது மகன் ஹேமந்த் கவுடுக்கு ஆர்.டி.சி.யில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பொன்னம் பிரபாகர், ஆர்.டி.சி. மேலாண்மை இயக்குனர் நாகி ரெட்டியுடன் இணைந்து வழங்கினார்.

அப்போது அமைச்சர் கூறுகையில், சங்கர் கவுடின் குடும்பத்துக்கு அரசு மற்றும் ஆர்.டி.சி. சார்பில் ஏற்கனவே நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ஆர்.டி.சி. ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்கி சுமார் ரூ.1 கோடி நிதி திரட்டி அந்த குடும்பத்துக்கு உதவி செய்துள்ளனர். தற்போது அரசு அளித்த வாக்குறுதியின்படி அவரது மகனுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA