Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 12 நவம்பர் (ஹி.ச.)
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு திருக்குடைகள் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தின் பல்வேறு அரசியல் மற்றும் ஆன்மிக விவகாரங்கள் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக வேலூரில் இருந்து திருக்குடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் விஐபி கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும், அண்ணாமலையாரை அனைத்து பக்தர்களும் சிரமமின்றி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வேலூர் கோட்டையில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தக் கோரி தேசிய லீக் என்ற பெயரில் சிலர் உள்ளே நுழைய முயன்றதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற செயல்கள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டினார்.
சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் செயல்படுபவர்களைக் கைது செய்யவும், தேசிய லீக் கட்சியைத் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
காஞ்சிபுரம் கந்தகோட்டத்தில் கும்பாபிஷேகத்திற்காக ஏற்கெனவே தேதி முடிவு செய்யப்பட்டு அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்ட நிலையில், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறியதால் தேதி மாற்றப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பேசிய அவர்,
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும், வரும் 22ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருப்பதால் அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், சாலைகள் சேதமடைந்து சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்றும், தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்றும் தனது கருத்தை முன்வைத்தார்.
மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தின் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகளையும் விமர்சித்தார்.
தமிழகத்தில் நூலக நிர்வாகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்குப் பின்னணியில் சில அமைப்புகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் கூறிய அர்ஜுன் சம்பத், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் ஓரளவு தடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V