டெல்லியைச் சூழ்ந்த காற்று மாசு - 40 இடங்களில் AQI 300-ஐ கடந்தது
புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.) டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகரின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 323 ஆகப் பதிவாகியுள்ளது. இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்டுள்ள தரவுகளின்பட
Delhi


புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகரின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 323 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டெல்லியில் உள்ள 59 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களில் 57 நிலையங்களின் விவரங்கள் கிடைத்துள்ளன.

அவற்றில் 56 நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200-ஐக் கடந்துள்ளது.

மேலும், 40 நிலையங்களில் AQI அளவு 300-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இரண்டு கண்காணிப்பு நிலையங்கள் 'கடுமையான' (Severe) மாசு நிலையை எட்டியுள்ளன.

குறிப்பாக, ஐஐடி டெல்லி பகுதியில் அதிகபட்சமாக 416 AQI பதிவாகியுள்ளது. ஜாஃபர்பூரில் 404, ஐடிஓ பகுதியில் 399, டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் 395, சாந்தினி சவுக்கில் 387 என காற்றுத் தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, வடமாநிலங்களில் விவசாய அறுவடைக்குப் பிறகு பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் டெல்லியின் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மட்டும் ஆறு மாநிலங்களில் மொத்தம் 927 விவசாயக் கழிவு எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் மத்தியப் பிரதேசத்தில் 376 சம்பவங்களும், பஞ்சாபில் 345 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 119, ராஜஸ்தானில் 64, ஹரியானாவில் 14, உத்தரகாண்டில் 9 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

டெல்லியின் மொத்த காற்று மாசில் விவசாயக் கழிவு எரிப்பின் பங்களிப்பு புதன்கிழமை 7 சதவீதமாக இருந்த நிலையில், இன்று அது 20 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வாகனப் போக்குவரத்து மூலம் ஏற்படும் மாசு 17 சதவீதப் பங்களிப்புடன் முக்கியக் காரணியாக உள்ளது.

மேலும், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை மொத்தம் 9,592 விவசாயக் கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காற்று மாசு அதிகரிப்பால் டெல்லி மக்களின் அன்றாட வாழ்க்கையும் உடல்நலமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V