Enter your Email Address to subscribe to our newsletters

இமாச்சல், 12 நவம்பர் (ஹி.ச.)
காங்ரா மாவட்டத்தில் உள்ள பீர் பகுதி, பாராகிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு கடந்த 2026 நவம்பர் 10ஆம் தேதி பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்து விபத்தில் சிக்கியதாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பீர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விசாரணையில், பாராகிளைடிங் செய்வதற்காக அங்கு வந்திருந்த கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஷுபம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
உடனடியாக அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து காங்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குல்பூஷன் வர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விபத்துக்கான காரணம் குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
பாராகிளைடிங்கின்போது பயணியைப் பாதுகாப்பாக இணைக்கும் காரபைனர் அல்லது இருக்கையுடன் பொருத்தப்படும் பாதுகாப்புப் பட்டையான சீட் ஹார்னஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று செயலிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஷுபம் பாராகிளைடரில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தில் கவனக்குறைவு இருந்ததாகக் கூறி, பாராகிளைடிங் விமானிக்கு எதிராக பீர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பீர் பகுதியில் பாராகிளைடிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அண்மையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி பாதுகாப்புத் தணிக்கை நடத்தியுள்ளார்.
சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதுடன், விதிமுறைகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V