Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணசாமி, திரைப்படத்தின் தலைப்பு தொடர்பாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு மே 29ஆம் தேதியே கமல்ஹாசனின் ‘Thug Life’ திரைப்படத்தின் பெயருக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, அந்த அறிக்கையையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
திரைப்படங்களின் தலைப்புகள் இளைஞர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், தவறான வழிகாட்டுதலுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
தற்போது ‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்படுவதை எதிர்த்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மனு அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2003ஆம் ஆண்டிலும் இதே பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலையிட்டு அறிவுரை வழங்கியதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அந்தப் பெயரைக் கைவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், 2004ஆம் ஆண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பெயரை மீண்டும் பயன்படுத்த தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்திருக்கக் கூடாது என்றும், தங்களது புகார் தொடர்பாகக் குழுவைக் கூட்டி ஆலோசிப்பதாகச் சங்கத்தினர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
திரைப்படங்களில் பழிக்குப் பழி வாங்குதல், ரத்தம், அரிவாள் கலாச்சாரம் போன்றவை முன்னிறுத்தப்படுவது இளைஞர்களிடம் வன்முறை எண்ணத்தைத் தூண்டுவதாக கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, திரைப்படக் காட்சிகளை இளைஞர்கள் ரீல்ஸ்களாக உருவாக்கி அரிவாளால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் திரைப்படத் தலைப்பும் அதன் கருத்துகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் எனக் கூறிய அவர், தமிழகம் முழுவதும் காவல்துறையிடம் புகார் அளித்து கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், திரைப்படங்கள் பொழுதுபோக்கிற்கானதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரிவாள் கலாச்சாரம், ஆபாசம் மற்றும் சாதிய அடையாளங்களை முன்னிறுத்தும் போக்கு ஒழிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திரைப்படத் தலைப்பு தொடர்பாக மத்திய தணிக்கைக் குழு கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, கமல்ஹாசன் ஒரு வாரத்திற்குள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V