Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 12 நவம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வேலி கிராமத்தில் காளியம்மன் கோவில் எதிரே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது.
கடந்த 1995ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தொட்டி 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இதன் மூலம் கிராமத்தில் உள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குடிநீர்த் தொட்டியின் மேற்பகுதியில் மனிதக் கழிவுகள் காணப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் செல்போனில் சிக்னல் கிடைக்காததால் தொட்டியின் மேலே ஏறியபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அங்கு பார்த்தபோது மனிதக் கழிவுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் கிராம மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொட்டியின் மேற்பகுதியில் மூடி இல்லாததால் தகரச் சீட்டால் மூடப்பட்டுள்ளது. கான்கிரீட் பகுதிகள் உடைந்து விழும் நிலையில் உள்ளதுடன், தொட்டியின் உள்ளே இறங்குவதற்கான ஏணியும் இல்லை.
இதனால் தொட்டியைச் சுத்தம் செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், எலி உள்ளிட்ட விலங்குகள் தொட்டிக்குள் விழுவதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
குடிநீர்த் தொட்டியின் மேற்பகுதியில் அசுத்தம் செய்தவர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் சில இளைஞர்கள் மது அருந்துதல் மற்றும் கஞ்சா பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய தொட்டியை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறுகையில், பழைய குடிநீர்த் தொட்டியை அகற்றுவதற்கு ஏற்கெனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான உத்தரவு கிடைத்ததும் தொட்டி அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், தொட்டியில் இருந்த குடிநீர் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளதாகவும், கிராம மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாட்டின் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / LOGESHWARI V