Enter your Email Address to subscribe to our newsletters

பஞ்சாப், 12 நவம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம், ரவுடிகளின் ஆதிக்கம், கொலைச் சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து, ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் சச்சின் பைலட், மாநில அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பஞ்சாப் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த சச்சின் பைலட், மாநிலத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
ஏற்கெனவே சங்ரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாபில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், குற்றச்சம்பவங்கள், கொலைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலை தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மற்றும் அரசின் பொறுப்புணர்வை எதிர்பார்ப்பதாகவும் சச்சின் பைலட் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் சரண்ஜித் சிங்கின் தொகுதியில் இருந்து இந்த சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மக்களிடையே நேரடியாகச் சென்று மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளை எடுத்துரைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து சைக்கிள் பேரணிகள், நடைப்பயணங்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகள் தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், பஞ்சாப் மாநிலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதே முக்கிய இலக்கு என்றும் அவர் கூறினார்.
முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ஆட்சியில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டதாக சச்சின் பைலட் விமர்சித்தார்.
மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தீவிரமாகப் பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர், சில நேரங்களில் நகைச்சுவையான கருத்துகளை முன்வைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, போதைப்பொருள் பாதிப்பால் எதிர்காலத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள இளைஞர்களின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V