Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 12 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரகக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான மற்றும் தரமான குடிநீர் வழங்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடர்பான மண்டல மாநாடு திருச்சியில் நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த மாநாட்டில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய அமைச்சர் ஆனந்த், தமிழகத்தில் சுமார் 1.25 கோடி ஊரக வீடுகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்காக 45 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 56 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை மறுசீரமைக்கும் பணிகள் மற்றும் 21,258 தனி கிராமக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் வாயிலாக சுமார் 1.86 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர் என்றார்.
இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.18,123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பாக ரூ.9,025 கோடியும், தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.9,097 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தின் 1.25 கோடி ஊரக வீடுகளில் இதுவரை 1.15 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 9,398 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறினார்.
ஊரகப் பகுதிகளில் ஒருவருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீரின் தரத்தைப் பாதுகாக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மாதத்திற்கு இருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகவும் குடிநீர் ஆதாரங்களின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது.
குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை உடனடியாகத் தெரிவிக்க 155340 என்ற கட்டணமில்லா 'ஊராட்சி மணி' தொலைபேசி சேவை, 'புனல்' இணையதளம் மற்றும் குடிநீர் விநியோகக் கண்காணிப்புச் செயலி ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.
மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2028 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூன் 2, 2026 அன்று தமிழக முதலமைச்சர் மற்றும் ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் தினமும் போதுமான அளவில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர் ஆனந்த் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V