உத்தரப் பிரதேசத்தில் 24 கோசி பரிக்ரமா யாத்திரை தொடக்கம்-3,000 பக்தர்கள் பங்கேற்பு!
சம்பல், 13 நவம்பர் (ஹி.ச.) உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் புகழ்பெற்ற 24 கோசி பரிக்ரமா யாத்திரை இன்று தொடங்கியது. இந்த ஆன்மிகப் பயணத்தில் சுமார் 2,500 முதல் 3,000 பக்தர்கள் ஒரே குழுவாகப் பங்கேற்றுள்ளனர். யாத்திரையை முன்னிட்டு மாவட்ட நிர்
Vikkaa


சம்பல், 13 நவம்பர் (ஹி.ச.)

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் புகழ்பெற்ற 24 கோசி பரிக்ரமா யாத்திரை இன்று தொடங்கியது.

இந்த ஆன்மிகப் பயணத்தில் சுமார் 2,500 முதல் 3,000 பக்தர்கள் ஒரே குழுவாகப் பங்கேற்றுள்ளனர். யாத்திரையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாகச் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சம்பல் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் (எஸ்.டி.எம்.) விகாஸ் சந்திரா கூறுகையில், பக்தர்களின் பங்கேற்புடன் 24 கோசி பரிக்ரமா யாத்திரை சிறப்பாகத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

வம்ஷ் கோபால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த யாத்திரை, புவனேஸ்வர் புனிதத் தலம் வழியாகச் சென்று, பின்னர் சேம்நாத் பகுதியை அடைகிறது. இறுதியாக சந்திரேஷ்வர் பகுதியில் யாத்திரை நிறைவடையும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படாத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக வழித்தடங்களில் தற்காலிகப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், யாத்திரைப் பாதைகள் சுத்தம் செய்யப்பட்டு, இரவு நேரங்களில் பயணிப்பதற்கு ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, குடிநீர் வசதி, சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கியமான இடங்களில் பக்தர்களை வரவேற்கும் வகையில் மலர் தூவுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. உள்ளூர் காவல் நிலையங்களின் வழக்கமான காவலர்களைக் காட்டிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சில இடங்களில் சாதாரண உடையில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாத்திரையின் தொடக்கம் முதல் நிறைவு வரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

எந்தவிதமான இடையூறும் இன்றி பக்தர்கள் தங்களது ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.டி.எம். விகாஸ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V