Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் அதிகரிக்கும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 6 மாதங்களுக்கு குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, ஜனவரி முதல் ஜூன் வரை ஒவ்வொரு மாதமும் 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்சாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து, வாரத்தின் மற்ற நாட்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மாத வாரியாக மின்சாரக் கொள்முதலுக்கான உத்தேச விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.13-க்கும், பிப்ரவரி மாதத்தில் ரூ.9.50-க்கும் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் தலா ரூ.10-க்கும், மே மாதத்தில் ரூ.9.95-க்கும், ஜூன் மாதத்தில் ரூ.13-க்கும் கொள்முதல் செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதால், முன்கூட்டியே மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. அதேநேரத்தில், ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை அடிப்படையாகக் கொண்டு, கிடைக்கும் மின்சாரத்தில் குறைந்த விலையில் உள்ள மின்சாரத்தை மட்டுமே கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய மின்சாரத் தேவையைச் சமாளிப்பதுடன், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைத் தவிர்த்து கொள்முதல் செலவைக் கட்டுப்படுத்தவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P