Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 நவம்பர் (ஹி.ச.)
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இது ஐ.டி நிறுவனங்களுக்கு நேரடியான அச்சுறுத்தல் அல்ல என்றும், அதற்கேற்ப நிறுவனங்கள் தங்களது வர்த்தக முறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் ரிலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
இந்திய ஐ.டி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் முன்பு ஓரளவு சிறப்பாக இருந்தது.
ஆனால், வளர்ச்சி ஒற்றை இலக்கத்தின் குறைந்த அளவுக்குச் சென்றபோது முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையத் தொடங்கியது.
குறைந்த வளர்ச்சி கொண்ட நிறுவனங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன் என்ற கேள்வி சந்தையில் எழுந்ததே முக்கியக் கவலையாக இருந்தது என்றார்.
தற்போது ஏ.ஐ தொழில்நுட்பத்திற்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டமைப்புகளைப் பராமரிக்கவும், அவற்றுக்கான தொழில்நுட்பச் சேவைகளை வழங்கவும் நிறுவனங்கள் தேவைப்படுகின்றன.
இந்தப் பணிகளில் இந்திய ஐ.டி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஏற்கெனவே சில நிறுவனங்கள் ஏ.ஐ மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த விவரங்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.
மேலும், ஏ.ஐ மாதிரிகள், உள்கட்டமைப்புகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளுக்கான சேவைகளை வழங்குவதற்கான தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றன எனக் குறிப்பிட்டார்.
சந்தையில் ஏற்பட்ட விலைச் சரிவு மற்றும் நீண்டகாலத் தேக்கத்திற்குப் பிறகு ஐ.டி துறையில் மீண்டும் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வப்போது சில சவால்கள் ஏற்பட்டாலும், பெரும்பாலான எதிர்மறையான சூழல்கள் கடந்துவிட்டதாகத் தாங்கள் கருதுவதாகக் கூறினார்.
பங்குச்சந்தை நிலவரம் குறித்து அவர் கூறுகையில், நிஃப்டி குறியீடு சுமார் 3,000 புள்ளிகள் வேகமாக உயர்ந்துள்ளதால், அவ்வப்போது சந்தையில் சிறிய இடைநிறுத்தமும் விலை ஒருங்கிணைப்பும் ஏற்படுவது இயல்பானது என்றார்.
கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குச்சந்தையின் ரொக்கப் பிரிவில் சுமார் ரூ.80,000 கோடி முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது இந்தியச் சந்தை மீதான அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய சந்தைத் தேக்கம் தற்காலிகமானது என்றும், அடுத்தகட்டத்தில் நிஃப்டி குறியீடு 25,500 முதல் 25,750 புள்ளிகள் வரையிலான நிலையை எட்ட வாய்ப்புள்ளதாகவும் அஜித் மிஸ்ரா கணித்துள்ளார்.
இதற்கிடையில், மதிப்பீடு மற்றும் நிறுவனங்களின் தரம் உள்ளிட்ட காரணங்களால் சிறந்த பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஐ.டி பங்குகளில் முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V