உதவித்தொகை வழங்குவதில் தாமதமா?- அமைச்சர் வன்னியரசு விளக்கம்
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.) அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அமைச்சர் வன்னியரசு கேட்டுக்கொண்டுள்ளார். 2026–27ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொ
Vanniyarasu


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அமைச்சர் வன்னியரசு கேட்டுக்கொண்டுள்ளார்.

2026–27ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலவரம் குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

அதில், அறிவுதான் மனித வாழ்க்கையின் அடித்தளம் என்றும், மாணவர்களின் அறிவுசார் திறனைப் பாதுகாத்து அவர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்தியதை அமைச்சர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சமூகநீதித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 366 மாணவர்களுக்கு உதவித்தொகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் 165 பேர் தாங்கள் சேர்க்கை பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். எஞ்சியுள்ள 201 மாணவர்கள் ஜனவரி அல்லது மார்ச் 2027க்குள் பல்கலைக்கழகங்களில் சேர உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த 165 மாணவர்களில் 140 பேர் தங்களது சேர்க்கை விவரங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கட்டணக் கோரிக்கை தொடர்பான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 84 மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக இதுவரை ரூ.30.24 கோடி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 56 மாணவர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கான பல்கலைக்கழக வங்கிக் கணக்கு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும், 25 மாணவர்கள் இதுவரை இணையதளத்தில் விண்ணப்பிக்கவில்லை. அவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடு செல்வதற்கு முன்பு விசா, விமானக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் உள்ளிட்ட ஆரம்பச் செலவுகளைச் சமாளிக்கவும் அரசு உதவி செய்து வருகிறது.

இதற்காகத் தாட்கோ (TAHDCO) மூலம் நடப்பு ஆண்டில் தேர்வான 116 மாணவர்களுக்கு ரூ.9.50 கோடி சிறப்புக் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகை, பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையிலிருந்து ஈடுசெய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக் கட்டணம் நேரடியாகப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. விமானக் கட்டணம், விடுதிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட பிற செலவுகளுக்கான தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

அனைத்து உதவித்தொகை நடைமுறைகளும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பிரத்யேக இணையதளம் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் எவ்விதத் தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் வன்னியரசு விளக்கம் அளித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V