பெங்களூருவில் ரூ.15,600 கோடி மதிப்பிலான திட்டங்கள்! பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்!
பெங்களூரு, 13 நவம்பர் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வரவேற்றார். ஆளுநர் டாக்டர் சுதா யாதவும் அப்போது உடனிருந்தார். இந்தப் பயணத்தின
Modi


பெங்களூரு, 13 நவம்பர் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வரவேற்றார். ஆளுநர் டாக்டர் சுதா யாதவும் அப்போது உடனிருந்தார்.

இந்தப் பயணத்தின்போது ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், சில திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையைப் பார்வையிட்ட பிரதமர் மோடி, தவரேகெரே மெட்ரோ நிலையத்திலிருந்து இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம். பெங்களூரு நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள எஸ்-வியாசா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பிரசாந்தி குடிரத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் எச்.வி. சேஷாத்ரியின் நூற்றாண்டு பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார்.

கர்நாடக ஆளுநர் சுதா யாதவ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேரத் தொண்டராகப் பணியாற்றிய எச்.வி. சேஷாத்ரி, அமைப்பின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்ததாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, 13 ஆண்டுகள் அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து நாட்டிற்காகத் தன்னை அர்ப்பணித்ததாகத் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவதற்காக அவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதங்கள் மூலம் தொண்டர்களுக்கு ஊக்கமும், தனிப்பட்ட ஆதரவும், மன ஆறுதலும் அளித்ததாகப் புகழாரம் சூட்டினார்.தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, எச்.வி. சேஷாத்ரி தனது வாழ்நாள் முழுவதையும் தனிமனித மேம்பாட்டின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்காக அர்ப்பணித்தவர் என்று பாராட்டினார்.

ஒரு நாடு வளர்ச்சியின் உச்சத்தை அடைய வேண்டுமானால், அர்ப்பணிப்பு உணர்வு, திறமை மற்றும் ஒழுக்கம் கொண்ட குடிமக்கள் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், கர்நாடகத்தின் பாரம்பரியப் பெருமைக்கு மத்தியில் பிரசாந்தி குடிரத்தின் 50 ஆண்டுகாலப் பயணம் சேவை மற்றும் அர்ப்பணிப்பின் சிறந்த அடையாளமாகத் திகழ்வதாக மோடி தெரிவித்தார்.

சிறிய யோகா மையமாகத் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்திருப்பது அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதாகவும் பாராட்டினார்.

இதனிடையே, பிரசாந்தி குடிரத்தின் பொன்விழாவை முன்னிட்டு புதிய நிர்வாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்-வியாசா பல்கலைக்கழகத்தின் வெளிவளாகத்தையும் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V