Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 13 நவம்பர் (ஹி..)
பொதுவாக சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது வாகனங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாகப் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பயண நேரமும் அதிகரிக்கிறது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நெமிலி சுங்கச்சாவடியில் இதுவரை பயன்பாட்டில் இருந்த தடுப்புக் கட்டைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.
அவற்றுக்குப் பதிலாக, வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் காணக்கூடிய அதிநவீன கேமராக்களும், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஸ்கேன் செய்யும் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களின் எண் பலகை மற்றும் ஃபாஸ்டேக் விவரங்கள் தானாகவே பதிவு செய்யப்படும்.
அதன் அடிப்படையில், வாகனத்துடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக் கட்டணம் தானாகப் பிடித்தம் செய்யப்படும். இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தவோ, நீண்ட நேரம் காத்திருக்கவோ தேவையில்லை.
ஏற்கெனவே கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பரனூர் சுங்கச்சாவடி தமிழகத்தின் முதல் தடையற்ற சுங்கச்சாவடியாக மாற்றப்பட்டது.
தற்போது நெமிலி சுங்கச்சாவடியும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளதால், தமிழகத்தின் இரண்டாவது தடையற்ற சுங்கச்சாவடியாக உருவெடுத்துள்ளது.
இந்தப் புதிய வசதியால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், எரிபொருள் விரயம் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடும் கட்டுப்படுத்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V