Enter your Email Address to subscribe to our newsletters

மும்பை, 13 நவம்பர் (ஹி.ச.)
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும், சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த அரசியல் நகர்வு குறித்து சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தலித் மற்றும் முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் துபே,
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
அரசு திட்டங்கள் அறிவிக்கப்படும்போது, பயனாளிகள் இந்து, முஸ்லிம், சீக்கியர் அல்லது கிறிஸ்தவர் என மத அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், உத்தரப் பிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை முன்பைவிட வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசை எதிர்கொள்வதற்காக சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்குப் பதிலாக தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சூழலே உருவாகும் என விமர்சித்தார்.
ஏற்கெனவே இந்தியா கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகளும் உட்கட்சி முரண்பாடுகளும் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகும் சூழலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் கேள்விக்குறியாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசும் தலித், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள பணிகள் மிகப்பெரியவை என்றார்.
இந்தச் சமூகங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைச் சாதாரணமாகக் கருத முடியாது என்றும், தலித் மற்றும் பின்தங்கிய சமூக மக்கள் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆனந்த் துபே தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / LOGESHWARI V