Enter your Email Address to subscribe to our newsletters

திருச்செந்தூர், 13 நவம்பர் (ஹி.ச.)
கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 15-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 16-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெற்று விழா நிறைவடைகிறது.
விழாவையொட்டி நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைத் தவிர, தூத்துக்குடி, திருநெல்வேலி, உவரி, மணப்பாடு, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வழியாகச் செல்லும் இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு வராத தனியார் வாகனங்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்வதைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஆறுமுகநேரி, நல்லூர் 'V' சந்திப்பு, ராணிமகாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி உள்ளிட்ட மாற்றுப் பாதைகள் வழியாகப் பயணிக்கலாம் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு வழித்தடங்களில் இருந்து இயக்கப்படும் அரசு சிறப்புப் பேருந்துகளுக்கு மூன்று இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மற்றும் ஆறுமுகநேரி வழியாக வரும் பேருந்துகள் ஐடிஐ வளாகத்தில் நிறுத்தப்படும்.திருநெல்வேலி, குரும்பூர் வழியாக வரும் பேருந்துகள் ஷபி டிரேடர்ஸ் எதிரே உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி மற்றும் கன்னியாகுமரி வழியாக வரும் பேருந்துகள் எஃப்.சி.ஐ. குடோனுக்கு மேற்குப் பகுதியில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும்.
இந்தப் பேருந்து நிலையங்களிலிருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மழை அதிகமாகப் பெய்தால் பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும், பக்தர்கள் தங்களது வாகனங்களைச் சாலையோரங்களில் நிறுத்தாமல், காவல்துறையினர் அறிவுறுத்தும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் வரிசையாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மழை காரணமாக மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பக்தர்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V