Enter your Email Address to subscribe to our newsletters

காக்கிநாடா, 14 நவம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், காக்கிநாடா மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றுவதில் ஆளும் கூட்டணிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் 26-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது மேயர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
ஆனால், கூட்டணியில் மேயர் பதவி ஜனசேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
காக்கிநாடா மேயர் பதவியை கைப்பற்றும் நோக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கிடையே, காக்கிநாடாவை சேர்ந்த பிரபல டாக்டர் காதா வெங்கடரமணா தனது குடும்பத்தினருடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தை சேர்ந்த காதா சத்யஸ்ரீயை மேயர் வேட்பாளராக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஷெட்டி பலிஜா சமூகத்தை சேர்ந்த அவருக்கு வாய்ப்பு அளித்திருப்பதன் மூலம் சமூக ரீதியிலான ஆதரவை திரட்டவும் கட்சி திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், கூட்டணி ஒப்பந்தத்தின்படி காக்கிநாடா மேயர் பதவி ஜனசேனா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குத்துலா வெங்கட சுபா, சோள்ளங்கி சுப்பலட்சுமி, கடலி ஈஸ்வரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதற்கிடையே, காக்கிநாடா மேயர் பதவியை ஏற்கலாமா அல்லது அதற்கு பதிலாக கிழக்கு கோதாவரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பதவியை பெற்றுக்கொள்ளலாமா என்பது குறித்தும் கட்சிக்குள் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் கட்ட நகராட்சி தேர்தல்களில் கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், காக்கிநாடா மாநகராட்சியை கைப்பற்றுவது இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
அண்மையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 6 புதிய ஊராட்சிகளின் வாக்காளர்களும் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்க உள்ளனர்.
இதனால் மேயர் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகங்கள் என காக்கிநாடா அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA