தாக்கப்பட்ட 13 வயது சிறுவன் குடும்பத்துடன் குழந்தைகள் நலக்குழுவுக்கு மாற்றம் - தாய்க்கு தற்காலிக வேலை வழங்க முடிவு
கொல்லம், 14 நவம்பர் (ஹி.ச.) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலத்தில், மாற்றாந்தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட 13 வயது சிறுவனையும், அவரது குடும்பத்தினரையும் குழந்தைகள் நலக்குழுவின் (சி.டபிள்யூ.சி.) பராமரிப்புக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
A


கொல்லம், 14 நவம்பர் (ஹி.ச.)

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சடையமங்கலத்தில், மாற்றாந்தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட 13 வயது சிறுவனையும், அவரது குடும்பத்தினரையும் குழந்தைகள் நலக்குழுவின் (சி.டபிள்யூ.சி.) பராமரிப்புக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சிறுவனின் தாய்க்கு குழந்தைகள் நலக்குழுவில் தற்காலிக வேலை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலமேல் பகுதியைச் சேர்ந்த

8-ம் வகுப்பு படிக்கும் சிறுவனை, அவரது மாற்றாந்தந்தை ராஜேஷ் மது போதையில் அடிக்கடி தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவும் மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

ராஜேஷ் தொடர்ந்து குழந்தைகளை தாக்கி வந்ததால், அதனை ஆதாரமாக பதிவு செய்வதற்காக சிறுவனின் தாய் தாக்குதல் காட்சிகளை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து சைல்டு லைனில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து தாக்குதல் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து சிறுவனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவரையும் குடும்பத்தினரையும் குழந்தைகள் நலக்குழுவின் பராமரிப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குடும்பத்துக்கு வருமானம் கிடைக்கும் வகையில் சிறுவனின் தாய்க்கு குழந்தைகள் நலக்குழுவில் தற்காலிக வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA