தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் - கே.டி.ஆர்.
ஐதராபாத், 14 நவம்பர் (ஹி.ச.) தெலுங்கானா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாநில மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட
A


ஐதராபாத், 14 நவம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாநில மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ஆர். வலியுறுத்தியுள்ளார்.

ஐதராபாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை விமர்சித்து, கே.டி.ஆர். தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையான 'அபய ஹஸ்தம்' பொய்யான வாக்குறுதிகளின் தொகுப்பாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தலின்போது அளித்த 420 வாக்குறுதிகள், 13 பிரகடனங்கள், 6 உத்தரவாதத் திட்டங்கள் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடி கூட ஒதுக்கவில்லை என்றும், 42 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் சாடியுள்ளார்.

ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறிவிட்டு, இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும், மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உத்தரவாத அட்டை வழங்கும் திட்டம், ஏழை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் வழங்கும் அம்பேத்கர் அபய ஹஸ்தம் திட்டம் ஆகியவற்றையும் அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறுபான்மையினர் நலனுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் அரசு கவனம் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள கே.டி.ஆர்., பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறுவது மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி ஏன் மவுனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெலுங்கானா மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA