மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி மீது சிபிஐ அதிரடி சோதனை -6 மாநிலங்களில் 33 இடங்களில் ரெய்டு
புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.) சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாதேவ் ஆன்லைன் புக் செயலியின் பேனல் ஆபரேட்டர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.. கடந்த சில நாட்களாக ஆறு மாநிலங்களில் மொத
Cbi


புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மகாதேவ் ஆன்லைன் புக் செயலியின் பேனல் ஆபரேட்டர்களுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்..

கடந்த சில நாட்களாக ஆறு மாநிலங்களில் மொத்தம் 33 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ அதிகாரிகள், மகாதேவ் ஆன்லைன் புக் செயலி மூலம் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் சூதாட்டப் பேனல் ஆபரேட்டர்களின் இருப்பிடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது சில இடங்களில் நேரடியாக ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

மேலும், டிஜிட்டல் சாதனங்கள், செல்போன்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பிற நபர்களின் பெயர்களில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற வழிகள் தொடர்பான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் மகாதேவ் ஆன்லைன் புக் செயலியின் முக்கிய விளம்பரதாரர்களில் ஒருவராகக் கருதப்படும் சௌரப் சந்திராகர் (Sourabh Chandrakar) என்பவர் ஓமன் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

கடந்த நவம்பர் 1, 2026 அன்று அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் அவரை எட்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

விசாரணையின்போது மகாதேவ் ஆன்லைன் புக் செயலியின் செயல்பாடுகள், இந்தியாவில் இயங்கி வந்த பேனல் ஆபரேட்டர்களின் வலையமைப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரியவந்ததாக சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களைக் காட்டியும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையில், இந்த ஆன்லைன் சூதாட்டத் தளம் வெளிநாட்டில் உள்ள தலைமை அலுவலகம் மூலம் செயல்பட்டு வந்ததாகத் தெரியவந்தது..

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பேனல் ஆபரேட்டர்கள் மூலம் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வாடிக்கையாளர்களுக்கான கணக்குகளை உருவாக்குதல், பிற நபர்களின் பெயர்களில் தொடங்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகள் மூலம் பந்தயப் பணத்தைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் நடைபெற்றதாகவும் விசாரணையில் அம்பலமானது.

மேலும், சூதாட்டத்தின் மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் லாபத் தொகைகள் ஹவாலா பணப் பரிமாற்ற வழிகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

எட்டு நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 12ஆம் தேதி சௌரப் சந்திராகர் ராய்ப்பூரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் வெளிநாடுகளில் இருப்பதாகக் கூறப்படும் மற்ற குற்றச்சாட்டுக்குரிய நபர்கள், செயல்பாடுகளுக்கு உதவியவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் பங்கு குறித்தும் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நாடு கடத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V