கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரன் வதம் – “வெற்றிவேல், வீரவேல்” என முழங்கிய பக்தர்கள்!
தூத்துக்குடி, 14 நவம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. தென்பழனி என்று போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்ப
Soorasamharam


தூத்துக்குடி, 14 நவம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில் புகழ்பெற்ற குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. தென்பழனி என்று போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 10ஆம் தேதி தொடங்கியது.

விழாவின் ஐந்தாம் நாளான இன்று, சூரபத்மனின் தம்பியான தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, கழுகாசலமூர்த்தி சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது, முருகப்பெருமானிடம் தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர். இதையடுத்து வீரபாகுவை மீட்பதற்காக வீரவேலை ஏந்தியபடி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் போர்க்களத்திற்குச் சென்றார்.

தொடர்ந்து, கோவிலின் சார்பில் நாரதர் முருகாற்றுப்படை பாடல்களைப் பாடியபடி சூரபத்மனிடம் மூன்று முறை தூது சென்றார்.ஆனால், இந்த தூது முயற்சியில் சமரசம் ஏற்படாததால் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கழுகாசலமூர்த்தி சுவாமி தாரகாசூரனை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் வெற்றிவேல், வீரவேல் என முழக்கமிட்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றன.

பொதுவாக முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவின் ஆறாம் நாளில்தான் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், தமிழகத்திலேயே கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் மட்டும் ஐந்தாம் நாளில் தாரகாசூரன் வதம் நடைபெறுவது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கந்தசஷ்டி விழாவின் ஆறாம் நாளான நாளை சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து, விழாவின் ஒன்பதாம் நாளான வரும் 18ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சீர்பாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.

Hindusthan Samachar / LOGESHWARI V