Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 நவம்பர் (ஹி.ச.)
தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 3-ம் தேதி தேனியில் இருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விற்பனைக்காக மதுரைக்குச் சென்றபோது, வாலாந்தூர் அருகே அவர் ஓட்டி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக புகார் அளிப்பதற்காக நேற்று இரவு செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அவர் வந்துள்ளார்.
அப்போது லாரி தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே, லாரி நிறுவனத்தின் மேலாளர் சுரேஷ், லாரியில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், அதில் கொண்டு செல்லப்பட்ட ஏலக்காய்களைத் திருடி விற்பனை செய்துவிட்டு தீ விபத்து ஏற்பட்டதாக நாடகமாடுகிறாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாலகிருஷ்ணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அவரை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தங்க வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை காவல் நிலையக் கழிவறையில் அவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடந்ததாகக் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும், காவல் நிலையத்தில் விசாரணைக்காகத் தங்க வைக்கப்பட்டிருந்தவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும், லாரி தீ விபத்தின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நிலையத்திலேயே லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V