Enter your Email Address to subscribe to our newsletters

தெலுங்கானா, 14 நவம்பர் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலத்தில் கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் புதிய நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கிக் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு, ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துப் பேசினார்.
பல்வேறு நகரங்களில் வெயிலிலும், மழையிலும் டெலிவரி பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஓய்வெடுக்கத் தனிப்பட்ட இடங்கள் இல்லாத நிலை இருப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதனை மாற்றும் வகையில், ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் வைஃபை வசதியுடன் கூடிய ஓய்வு மையங்களைத் தெலங்கானா அரசு அமைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மையங்களில் கிக் தொழிலாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதுடன், அமர்ந்து ஓய்வெடுக்கவும், உறங்கவும் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
புதிய நலத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக கிக் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடும், ரூ.10 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு டெலிவரி பரிவர்த்தனைக்கும் 1 சதவீதத் தொகை கிக் தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்தத் தொகை முதலில் கிக் தொழிலாளர்கள் நல வாரியத்திற்குச் சென்று, பின்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். தெலங்கானாவின் அனைத்து நகரங்களிலும் செயல்படும் நிறுவனங்கள் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்த ராகுல் காந்தி, 21ஆம் நூற்றாண்டில் இரண்டு விதமான சித்தாந்தங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தொழிலாளர்களை அடிமைத் தொழிலாளர்களாக மாற்ற விரும்புவதாகக் குற்றம்சாட்டிய அவர், தொழிலாளர்களின் உழைப்பால் பெரும் நிறுவனங்களும் பணக்காரர்களும் மட்டுமே பயனடைவதாக விமர்சித்தார்.
இதற்கு மாறாக, காங்கிரஸ் கட்சி கிக் தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமாகக் கருதுவதாகவும், அவர்களைப் பாதுகாத்து வளர்ச்சியின் பங்காளிகளாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு தரவுகளின் காலமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், உபெர் உள்ளிட்ட நிறுவனங்கள் தரவுகளின் அடிப்படையில் இயங்கி வருவதாகக் கூறினார்.
ஆனால், கிக் தொழிலாளர்கள் தாங்கள் செய்த வேலை, முடித்த பயணங்கள் மற்றும் பெற்ற வருமானம் தொடர்பான தரவுகளைத் தாங்களே பார்ப்பதற்கான வாய்ப்பு இதுவரை போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றார்.
புதிய சட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்குச் சொந்தமான பணி விவரங்களைப் பெறுவதற்கான உரிமை உறுதி செய்யப்படுவதாகவும், தாங்கள் மேற்கொண்ட பயணங்கள், டெலிவரிகள் மற்றும் அதற்காக வழங்கப்பட்ட பணம் உள்ளிட்ட விவரங்களைத் தங்களது செல்போனிலேயே தெரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாகத் தெலங்கானா மாநில கிக் தொழிலாளர்களைச் சந்தித்தபோது, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் மற்றும் தங்களுடன் இணைந்து செயல்படும் தலைவர்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்ததாகவும், தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கிக் தொழிலாளர்களின் பாதுகாப்பு, வருமானம் மற்றும் சமூக நலனை உறுதி செய்வதில் தெலங்கானா அரசின் புதிய திட்டம் முக்கியத்துவம் பெறுவதாக இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V