நவீன இந்தியாவை உருவாக்கிய நேருவின் கனவு இன்றும் ஊக்கமளிக்கிறது – ராகுல்காந்தி!
புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவின் முதல் பிரதமரும், நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவருக்கு மரியாதை செலுத்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெள
Rahul gandhi


புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் முதல் பிரதமரும், நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவருக்கு மரியாதை செலுத்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், நேருவின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து மரியாதை கலந்த அஞ்சலியைச் செலுத்துவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் என்பது அவர்களின் இலக்கின் முடிவாக இருக்கவில்லை என்றும், புதிய இந்தியாவைக் கட்டமைப்பதற்கான நீண்ட பயணத்தின் தொடக்கமாகவே அது அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுயராஜ்ஜியம் என்பது வெறுமனே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சமமான பங்கும் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இந்தியா குறித்த நேருவின் தொலைநோக்குச் சிந்தனைகளையும் ராகுல்காந்தி தனது பதிவில் எடுத்துரைத்துள்ளார்.

நாட்டின் பன்முகத்தன்மையை அதன் மிகப்பெரிய பலமாகவும், ஜனநாயகத்தை மக்களின் நம்பிக்கையாகவும், சமத்துவத்தை நாட்டின் வலுவான அடித்தளமாகவும் நேரு கருதியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நவீன சிந்தனைகள் நிறைந்த, அறிவியல் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும், முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கும் தன்னம்பிக்கைமிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே நேருவின் கனவாக இருந்தது என்றும் ராகுல்காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது தொலைநோக்குப் பார்வையும் கொள்கைகளும் இன்றைய தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய இந்தியாவை உருவாக்குவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவதுடன் நின்றுவிடாமல், அவர் கனவு கண்ட நவீன, சமத்துவமான, ஜனநாயக இந்தியாவைக் கட்டமைப்பதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான மரியாதையாக இருக்கும் என்றும் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V