Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 14 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில், சிலர் அதிக வரி விதிக்கப்படும் சரக்குகளை குறைந்த வரி விதிக்கப்படும் பொருட்களின் பெயரில் ஆவணப்படுத்தி வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துறைமுகத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த வாரம் இந்தோனேசியாவில் இருந்து 40 அடி நீளமுள்ள கண்டெய்னர் ஒன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளது. அதில் வறுத்து உடைத்த கொட்டைப்பாக்கு இருப்பதாக இறக்குமதி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கமான சுங்க நடைமுறைகளின்படி, கண்டெய்னர் தூத்துக்குடி தட்டப்பாறை சாலையில் உள்ள தனியார் கண்டெய்னர் முனையத்திற்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனையிட்டனர்.
இதில், அதிகாரிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் முன்பகுதியில் மட்டும் வறுத்து உடைத்த கொட்டைப்பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், பின்பகுதியில் முழு கொட்டைப்பாக்கு மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கண்டெய்னரில் இருந்த அனைத்து மூட்டைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் சுமார் 25 டன் எடையுள்ள முழு கொட்டைப்பாக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2.5 கோடி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அனைத்து கொட்டைப்பாக்குகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த சொர்ண ராஜ் ஆகிய இருவரையும் அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரைப் பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V