டெல்லி, மும்பை – நியூயார்க் இடையே மீண்டும் நேரடி விமான சேவை- ஏர் இந்தியா அறிவிப்பு
புதுடெல்லி, 15 நவம்பர் (ஹி.ச.) இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் இடைநிறுத்தமில்லாத நேரடி சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக
Air india


புதுடெல்லி, 15 நவம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் இடைநிறுத்தமில்லாத நேரடி சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக, வான்வெளிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளிலும் ஏற்பட்ட வான்வெளிக் கட்டுப்பாடுகளால், இந்தியாவிலிருந்து நியூயார்க் செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இத்தாலியின் ரோம் நகரில் தொழில்நுட்ப இடைநிறுத்தம் (Technical Halt) மேற்கொண்டு வந்தன.

இதனால் சுமார் 22 மணி நேரமாக இருந்த பயண நேரம், தற்போது வான்வெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளதால் சுமார் 17 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

இதன்மூலம் பயணிகளுக்கு அதிகபட்சமாக 5 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போது டெல்லி மற்றும் மும்பையிலிருந்து நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு (JFK) தினசரி ஒரு விமானம் இயக்கப்படுகிறது.

மேலும், டெல்லியிலிருந்து நெவார்க் விமான நிலையத்துக்கு வாரத்தில் 4 முறையும், மும்பையிலிருந்து நெவார்க் விமான நிலையத்துக்கு வாரத்தில் 3 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

டெல்லியிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஏர்பஸ் ஏ350-900 ரக விமானங்களும், மும்பையிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு போயிங் 777-300ER ரக விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியிருப்பது இந்தியா - அமெரிக்கா இடையேயான விமானப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P