பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சி மோதலைத் தடுக்க 4 பேர் கொண்ட உயர்மட்டக் குழு
பஞ்சாப், 15 நவம்பர் (ஹி.ச.) 2027-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கும் வகையில் 4 பேர் கொண்ட உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவ
காங்கிரஸ்


பஞ்சாப், 15 நவம்பர் (ஹி.ச.)

2027-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல்களைத் தவிர்க்கும் வகையில் 4 பேர் கொண்ட உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பர்கத் சிங் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்தக் குழுவில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் விஜய் இந்தர் சிங்லா, சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் துணைத் தலைவருமான அருணா சவுத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குஷ்தீப் சிங் தில்லான் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஹர்தேவ் சிங் லாடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிற அரசியல் கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய விரும்பும் தலைவர்களைச் சேர்க்கும் நடைமுறையை இந்தக் குழு ஒருங்கிணைத்து கண்காணிக்கும்.

குறிப்பாக, வேறு கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களை காங்கிரஸில் இணைப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம் கட்டாயம் ஆலோசனை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுக் கட்சிகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் ஏற்கெனவே கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தரப்பினரிடையே நிலவும் அதிகாரப் போட்டியால் பஞ்சாப் காங்கிரஸில் கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. 2027 தேர்தலுக்கு முன்னதாக மாற்றுக் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை இணைத்துக்கொண்டு கட்சியை வலுப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ள நிலையில், அதனால் புதிய உட்கட்சிப் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P