சுவாமிமலையில் கந்தசஷ்டி விழா கோலாகலம் – இன்று மாலை சூரசம்ஹாரம்!
தஞ்சாவூர், 15 நவம்பர் (ஹி.ச.) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்க
சுவாமிமலை


தஞ்சாவூர், 15 நவம்பர் (ஹி.ச.)

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், அதிகாலை முதலே உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கந்தசஷ்டியை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமி வைரவேல் மற்றும் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து உற்சவர் சுவாமிநாத சுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையடுத்து இன்று மாலை நடைபெறும் முக்கிய நிகழ்வில், ஸ்ரீ சண்முக சுவாமி அம்பாளிடம் இருந்து சக்திவேல் பெறும் வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.

சூரசம்ஹாரம் நிறைவடைந்ததும் முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / GOKILA arumugam