ஒரு வாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு
தமிழ்நாடு, 15 நவம்பர் (ஹி.ச.) கல்வி, விவசாயம், வீட்டுவசதி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக அக்கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முதலமைச்சர் ச.
தவெக


தமிழ்நாடு, 15 நவம்பர் (ஹி.ச.)

கல்வி, விவசாயம், வீட்டுவசதி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்கள் நலனை முன்னிறுத்தி தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருவதாக அக்கட்சி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கடந்த வாரத்தில் அறிவித்த மற்றும் செயல்படுத்திய முக்கியத் திட்டங்கள் குறித்துப் பட்டியலிட்டுள்ள அக்கட்சி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கும் வெற்றி மடிக்கணினித் திட்டம், 70 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.3,521 கோடி ஒதுக்கீட்டில் வெற்றி வீடு திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. மேலும், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி, அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ரூ.17.99 கோடி செலவில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தும் திட்டம் ஆகியவற்றையும் பட்டியலிட்டுள்ளது.

சென்னையில் ரூ.500 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 1,000 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், சென்னையில் 9 திட்டப் பகுதிகளில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் 6,496 பேருக்கு ரூ.18.45 கோடி சிறப்பு வட்டித் தள்ளுபடி, குழந்தைகள் தினத்தையொட்டி ரூ.9.27 கோடி செலவில் பள்ளி மாணவர்களுக்கு கேக்குகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கியது, கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ.5,000 உயர்த்தும் அறிவிப்பு ஆகியவற்றையும் மக்கள் நல நடவடிக்கைகளாகப் பட்டியலிட்டுள்ளது.

இத்திட்டங்கள் மூலம் கல்வி, விவசாயம், வீட்டுவசதி, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் மக்களின் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam