கவுரவ விரிவுரையாளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதலே ஊதிய உயர்வு வழங்க வேண்டும் -அன்புமணி வலியுறுத்தல்
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 8,741 கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்த அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு நவம்பர் 1-ம்
Anbumani


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 8,741 கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்த அரசு அறிவித்துள்ளது.

இந்த உயர்வு நவம்பர் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி செப்டம்பர் மாதம் முதலே உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது,

பாமக உறுப்பினர் சிவக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன்,

கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, கடந்த அக்டோபர் 6-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஊதியத்தை ரூ.35 ஆயிரமாக உயர்த்துவதுடன்,

அடுத்த ஓராண்டுக்குள் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளபடி ரூ.50 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அளித்த விளக்கத்தில், செப்டம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

ஆனால், தற்போது நவம்பர் மாதம் முதல் மட்டுமே உயர்வு வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு மூன்று மாதங்கள் தாமதமாக உயர்வை வழங்குவது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் முதல் உயர்வை வழங்குவதற்கு சுமார் ரூ.8.74 கோடி மட்டுமே கூடுதல் நிதி தேவைப்படும். பெரிய அளவிலான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் தமிழக அரசுக்கு இது அதிக சுமையாக இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும், மே மாதம் உட்பட ஊதியம் வழங்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு, பெண் விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, பணி ஓய்வின்போது ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V