Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 நவம்பர் (ஹி.ச.)
கோவை அவினாசி சாலையில் நடைபெற்ற தனியார் கருத்தரிப்பு மையத்தின் தொடக்க விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் மற்றும் செஞ்சியில் மாயமான சிறுமி தொடர்பாக தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
முருகப்பெருமானை வழிபட்டு கடந்த ஆறு நாட்களாக விரதம் இருந்து வந்த பக்தர்கள், சூரசம்ஹாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நாளை நடைபெற உள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு விரதத்தை நிறைவு செய்ய உள்ளதாக அண்ணாமலை குறிப்பிட்டார்.
இதையொட்டி முருக பக்தர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை தீபம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றார்.
நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பிறகும், கடந்த கால திமுக ஆட்சியிலும் தற்போதைய அரசும் அதனை ஏற்காமல் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், இரு மதத்தினரிடையே தேவையற்ற மோதல் மற்றும் பகைமையை ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்படக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து செஞ்சி பகுதியில் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக காணாமல் போயுள்ள 7 வயது சிறுமி குறித்துப் பேசிய அண்ணாமலை, இதுவரை சிறுமி கண்டுபிடிக்கப்படாதது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்தார்.
சிபிசிஐடி அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டும் சிறுமி மீட்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடும் தமிழக அரசு, காணாமல் போன சிறுமியை மீட்பதிலும் அதே அளவிலான அக்கறையைக் காட்ட வேண்டும் என்றார்.
காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி, சிறுமியைப் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / LOGESHWARI V