செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு - நீதி விசாரணைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணன், மதுரை அவனியாபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கூரியர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சரக்குப் போக்குவரத்து வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஏலக
Imk


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணன், மதுரை அவனியாபுரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் கூரியர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் சரக்குப் போக்குவரத்து வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து மதுரைக்குச் சென்றபோது, வாலாந்தூர் சுடுகாடு அருகே அவர் ஓட்டிச் சென்ற வாகனம் தீப்பற்றியது. இதில் வாகனத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நவம்பர் 13ஆம் தேதி இரவு பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 14ஆம் தேதி காலை காவல் நிலையக் கழிவறையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல்துறையின் முக்கியப் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களிடம் காவல்துறையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கட்சி, கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி தண்டனை பெற்ற சிறைவாசிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன என்பதை காவல்துறை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு, சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுள்ள கட்சி, காவல்துறை நிர்வாகத்தில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் குழுவில் மக்கள் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், மனித உரிமை ஆய்வாளர்கள் மற்றும் புலனாய்வுத் துறை நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்றும், காவல் நிலைய மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தது தற்கொலையா? அதற்கான சூழல் எவ்வாறு ஏற்பட்டது? சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் செயல்பாடுகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருந்தனவா? என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும், விசாரணையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரின் எதிர்கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு உரிய நிவாரணம் மற்றும் மறுவாழ்வு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / LOGESHWARI V