Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 15 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் வன்னியரசு, முகாமைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
மேகதாது அணை விவகாரம், நூலக முறைகேடு புகார்கள், சட்டம்-ஒழுங்கு மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடக அரசு கூறுவது புதிதல்ல. எடியூரப்பா ஆட்சிக் காலத்திலிருந்தே இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
ஆனால், மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. முந்தைய அரசும் இதே கொள்கையைக் கடைப்பிடித்தது. தற்போதைய அரசும் அதையே தொடர்ந்து வருகிறது.
மேகதாது அணை கட்டுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. கர்நாடக அரசோ அல்லது பாஜகவின் துணையுடனோ எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு துறையிலும் முறைகேடு புகார்கள் முன்வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, நூலகத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார்கள் கவலைக்குரியவை என்றார்.
அறிவியல் வளர்ச்சிக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே தொழில்நுட்பத்தை முறைகேடுகளுக்குப் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாகும். தந்தை பெரியாரின் பெயரில் செயல்படும் அறிவுசார் அமைப்புகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மதுரையில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காவல் நிலைய மரணங்கள் எக்காரணம் கொண்டும் நிகழக்கூடாது என்றார்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்கள் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லும் சூழலை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இதற்காக காவலர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய முக்கியப் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.
எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். இந்த அரசு தனது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார்.
மேலும், மாநில உரிமைகளையும் மாநிலத்தின் அடையாளத்தையும் மீட்டெடுக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னியரசு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட மாநில உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்காக முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V