ஜன்ஜாதிய கௌரவ தின விழாவில் பழங்குடியின மக்களுக்காக ரூ.3,000 கோடி திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
மகாராஷ்டிரா, 15 நவம்பர் (ஹி.ச.) ஜன்ஜாதிய கௌரவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பழங்குடியின மக
Modi


மகாராஷ்டிரா, 15 நவம்பர் (ஹி.ச.)

ஜன்ஜாதிய கௌரவ தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பழங்குடியின மக்களின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

மொத்தம் 246 திட்டங்களில் 173 திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார். இதில் பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள 38 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமரின் ஜன் ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 100 பல்நோக்கு மையங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த மையங்கள் பழங்குடியின மக்களுக்கான அரசின் சேவைகளை வழங்குவதற்கும், சமூக நலச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கும் முக்கிய மையங்களாகச் செயல்பட உள்ளன.

இதுதவிர, PM-JANMAN மற்றும் தர்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், 2021ஆம் ஆண்டு ஜன்ஜாதிய கௌரவ தினத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

பழங்குடியின தலைவர்களைக் கௌரவிப்பது இந்திய நாட்டையே கௌரவிப்பதற்குச் சமம் என்றும், தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நாடு முழுவதும் ஜன்ஜாதிய கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் என்றும் பிரதமர் அறிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த ஆண்டு இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்திற்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பழங்குடியின மக்களுக்கு நீண்டகால வரலாறும் செழுமையான கலாசாரமும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் மீது படையெடுப்புகள் நடைபெற்ற காலங்களில் பழங்குடியினத் தலைவர்கள் நாட்டைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறினார்.

ஆனால், அவர்களின் தியாகங்களும் பங்களிப்புகளும் காலப்போக்கில் மறக்கப்பட்டதாகவும், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பழங்குடியினத் தலைவர்களின் வரலாற்றையும் பெருமைகளையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

தற்போது நாட்டின் வரலாற்றில் பழங்குடியினத் தலைவர்களின் பங்களிப்புகள் மீண்டும் நினைவுகூரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / LOGESHWARI V