Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 15 நவம்பர் (ஹி.ச.)
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தபடி, வண்ணமயமான மலர்களைக் கண்டு ரசித்தும், புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்தும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்து வருகின்றனர்.
இயற்கை எழில் நிறைந்த நீலகிரி மாவட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.
குறிப்பாக, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் நாள்தோறும் நீலகிரிக்கு வருகை தருகின்றனர்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகையில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டு மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
பூங்காவிற்கு வந்தவர்கள் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு வண்ண மலர்களைப் பார்த்து ரசித்தனர்.
மேலும், பூங்காவின் பெரிய புல்வெளிப் பகுதியில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அமர்ந்து உரையாடி, விளையாடி, பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பூங்காவின் இயற்கைச் சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.
உதகையில் நிலவும் குளிர்ச்சியான, இதமான காலநிலை சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்தது. பூங்காவின் அழகிய மலர் அலங்காரங்கள் மற்றும் பசுமையான சுற்றுப்புறங்களின் பின்னணியில் பலரும் தங்களது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் மற்றும் செல்ஃபிகளை எடுத்துக்கொண்டனர்.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் பண்டிகைக் கால உற்சாகம் களைகட்டியுள்ளது.
Hindusthan Samachar / LOGESHWARI V