Enter your Email Address to subscribe to our newsletters

பழனி, 15 நவம்பர் (ஹி.ச.)
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்கார் சேவைகள் மூலம் மலைக்கோயிலுக்குச் சென்றனர்.
இதனால் மலைக்கோயிலின் பிரகாரங்கள் மற்றும் மண்டபங்கள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆறு நாட்களாகக் கடுமையான கந்தசஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள், பழனி மலைக்கோயில் வளாகத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து பாரம்பரிய தண்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
இதற்காக வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, பழங்கள் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து பாரம்பரிய முறையில் தண்டு கூட்டு தயாரித்தனர். அதனை தண்டாயுதபாணி சுவாமிக்குப் படைத்து, பின்னர் பிரசாதமாக உட்கொண்டு தங்களது ஆறு நாள் விரதத்தை நிறைவு செய்தனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இன்று காலை 11.30 மணிக்குப் பிறகு கட்டண தரிசனச் சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தொடர்ந்து உச்சிக்கால மற்றும் சாயரட்சை பூஜைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையே, பிற்பகல் 3 மணிக்கு மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் பராசக்தி வேல் பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சன்னதி நடை சாத்தப்பட உள்ளதால், அதற்கு முன்னதாக மலைக்கோயிலில் குவிந்துள்ள பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் பல்வேறு பக்தர்கள் விரதம் இருந்து., அங்க பிறந்தக்ஷணம் செய்தும், பால்குடம், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சில பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதையொட்டி அன்னதானம் வழங்கினர்.
காலை 11மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி நிறுத்தப்பட்ட நிலையில் மதியம் 1 மணிக்கு மேல் மீண்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காகப் பழனியில் பக்தர்கள் பெருமளவில் திரண்டுள்ளதால், கோவில் வளாகம் முழுவதும் திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது.
Hindusthan Samachar / LOGESHWARI V