Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 நவம்பர் (ஹி.ச.)
பாதுகாப்புத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களின் தரம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அழிவில்லா சோதனை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த 36-வது ஆண்டு மாநாடு மற்றும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்புத் துறையில் அழிவில்லா சோதனை தொடர்பான 15-வது சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங்,
இந்த முக்கியமான மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஆனால், வைரஸ் காய்ச்சல் காரணமாக நேரில் வர இயலவில்லை என்றும், அதனால் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சிறப்புமிக்க மாநாட்டை ஏற்பாடு செய்த இந்திய அழிவில்லா சோதனைச் சங்கத்தின் நிர்வாகிகள், ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் கருப்பொருளான 'புத்தாக்கம் மூலம் உத்திசார் மற்றும் பொருளாதார மேன்மை' என்பது தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தமானதாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய, தொழில்துறையில் வலிமையான, பாதுகாப்பில் உறுதியான மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றார்.
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அந்தத் தொழில்நுட்பங்களின் தரம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
குறிப்பாகப் பாதுகாப்புத்துறை போன்ற முக்கியமான துறைகளில் சிறிய குறைபாடுகள்கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார்.
இந்தியா தனது உள்நாட்டு பாதுகாப்புத் தொழில்நுட்பக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ஏவுகணை தயாரிப்பு, கடற்படைத் தளங்கள், விமானத் தொழில்நுட்பம், ரேடார் அமைப்புகள் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி, விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் திறனை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் பயன்பாட்டுக்கு வந்தது, நாட்டின் பாதுகாப்புத் தொழில்நுட்பப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள் மேலும் நவீனமடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு முக்கியப் பொருள், உதிரிபாகம் மற்றும் உற்பத்திச் செயல்முறையும் மிக உயர்ந்த தரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
உற்பத்தியில் மறைந்திருக்கும் சிறிய குறைபாடுகள்கூட உபகரணங்களின் செயல்பாட்டைப் பாதிக்கலாம். பராமரிப்புச் செலவை அதிகரிக்கலாம்.
அவற்றின் பயன்பாட்டுக் காலத்தைக் குறைப்பதுடன், முக்கியமான நேரங்களில் ராணுவ நடவடிக்கைகளின் வெற்றியையும் பாதிக்கக்கூடும் என்றார்.
Hindusthan Samachar / LOGESHWARI V