உத்தரப் பிரதேச தேர்தலில் 209 வேட்பாளர்களா? -பாஜக மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரி விளக்கம்!
உத்தரப் பிரதேசம், 15 நவம்பர் (ஹி.ச.) 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக 209 வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரி மறுப்பு தெரிவி
Bankaj sowthiri


உத்தரப் பிரதேசம், 15 நவம்பர் (ஹி.ச.)

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக 209 வேட்பாளர்களின் பெயர்களை இறுதி செய்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு, அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் பங்கஜ் சௌத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

209 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக வெளியான தகவல் எந்த அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது என்பது தனக்குத் தெரியாது என்றும், பாஜக மாநிலத் தலைவர் என்ற முறையில் இதுதொடர்பாக யாருடனும் இதுவரை எந்த ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

மேலும், பாஜகவில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார்.

முதற்கட்டமாக மாவட்ட மற்றும் மண்டல அளவில் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து வேட்பாளர்கள் தொடர்பான கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்படும்.

பின்னர் அந்தப் பரிந்துரைகள் மாநில அளவிலான கூட்டங்களில் பரிசீலிக்கப்படும். இதற்காகக் கட்சியின் மையக் குழு மற்றும் தேர்தல் குழு ஆலோசனை நடத்தும்.

அதன்பிறகு, வேட்பாளர் தேர்வு தொடர்பான விவரங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கட்சியின் நாடாளுமன்றக் குழு இறுதி முடிவை எடுக்கும். இதுவே பாஜகவில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான வழக்கமான நடைமுறை என்றும் பங்கஜ் சௌத்ரி தெரிவித்தார்.

மேலும், வேட்பாளர் பட்டியல் தொடர்பாக யாராவது இதுபோன்ற தகவல்களைப் பரப்பினால், அதுகுறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளாக பாஜக இதேபோன்ற அமைப்பு ரீதியான நடைமுறையையே பின்பற்றி வருவதாகக் கூறிய அவர், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் தனிநபரின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை என்றும், நிர்வாகிகள் இடையிலான ஆலோசனை மற்றும் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், பாஜக குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கட்சி அல்ல என்றும், கட்சியின் முடிவுகள் அனைத்தும் கூட்டாக ஆலோசித்து எடுக்கப்படும் என்றும் பங்கஜ் சௌத்ரி விளக்கமளித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V