மேகதாது முதல் தவெக எதிர்காலம் வரை - திருநெல்வேலியில் வைகோ பரபரப்பு பேட்டி!
திருநெல்வேலி, 15 நவம்பர் (ஹி.ச.) திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்., கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்க
Vaiko


திருநெல்வேலி, 15 நவம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்.,

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவது தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என வைகோ தெரிவித்தார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் கருத்துகளுக்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, கீழ்மாநிலத்தின் நீர்வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல்மாநிலம் செயல்படக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், இந்த விவகாரத்தில் மதிமுகவின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து வரும் 17ஆம் தேதி தென்காசியில் நடைபெறும் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறை செயல்பட்ட விதம் குறித்து வைகோ விமர்சனங்களை முன்வைத்தார். ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதி வழங்காமல் தற்போதைய அரசு உறுதியாக இருப்பதாகக் கூறி முதல்வர் விஜயைப் பாராட்டினார்.

மேலும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கியதற்காக முதல்வரின் நடவடிக்கையை மனிதாபிமானமானது என்றும் குறிப்பிட்டார்.

நூலகத்துறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வைகோ குற்றம் சாட்டினார். பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களில் செயல்படும் நூலகங்களில் இடம்பெற்றுள்ள சில புத்தகங்களின் தலைப்புகளுக்கும் அவற்றின் உள்ளடக்கங்களுக்கும் தொடர்பில்லாத வகையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், இதுகுறித்து விசாரணைக் குழு அமைத்து முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த 34 ஆண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு ஆட்சிக்காலங்களில் நடைபெற்ற கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் காவல் மரணங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களைத் தொகுத்து தனியாக ஆவணப்படுத்தியுள்ளதாக வைகோ தெரிவித்தார்.

ஊழல் மற்றும் கமிஷன் முறைகேடுகள் குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஆன்லைன் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சில துறைகளில் முறைகேடுகள் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய வைகோ, எதிர்வரும் இடைத்தேர்தல்களில் தவெக தலைமையிலான அணி வெற்றி பெறும் எனத் தனது கணிப்பைத் தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சி அதன் திட்டமிடப்பட்ட காலம் வரை தொடரும் என்றும், எதிர்காலத்தில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, மதிமுக சார்பில் மாநில வழக்கறிஞர்கள் மாநாடு வரும் ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் திருநெல்வேலியில் நடைபெற உள்ளதாக வைகோ அறிவித்தார்.

மேலும், சோனியா காந்தி எழுதியுள்ள சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க டெல்லியிலிருந்து அழைப்பு வந்திருந்ததாகவும், கட்சிப் பணிகள் காரணமாக அந்த நிகழ்ச்சியில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V