Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அமைப்புச் செயலாளருமான சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, கடந்த நவம்பர் 6ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை ஏற்கெனவே விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், அவர் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் புதன்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர்.
அந்தக் காலகட்டத்தில் தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.34.79 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக, 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2023ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / LOGESHWARI V