காவல் நிலைய மரணங்கள் அதிகரிப்பு -த.வெ.க ஆட்சியை கடுமையாகச் சாடிய திண்டுக்கல் லியோனி!
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல்துறையினர் மீதான புகார்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசை திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு குறித்து வீரமா
Leoni


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவல்துறையினர் மீதான புகார்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசை திமுகவைச் சேர்ந்த திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு சட்டம் ஒழுங்கு குறித்து வீரமாகப் பேசிய தவெக தலைவர் விஜய், தற்போது ஆட்சியில் இருப்பதால் மௌனம் காப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திண்டுக்கல் லியோனி,

மதுரை செக்கானூரணியில் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேதப் பரிசோதனைத் தகவல்கள் இந்த விவகாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், கடலூர் புதுப்பேட்டையில் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவமும் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆறு மாதங்களில் ஆறு காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதுதான் தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமையா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு பொதுக்கூட்ட மேடைகளில் ஆவேசமாகப் பேசிய விஜய், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்த விவகாரங்களில் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

முதல்வரின் மௌனம் குறித்து ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒருபக்கக் கட்டுரை வெளியிடும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளதாகவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருவதாகவும்,

இதுபோன்ற விவகாரங்களில் முதல்வர் உரிய நடவடிக்கையோ கண்டனமோ தெரிவிக்காமல் இருப்பதாகவும் லியோனி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களின் உயிரைப் பாதுகாப்பதே ஒரு முதலமைச்சரின் முதன்மையான கடமை என்றும், மேடைப் பேச்சுகளால் மட்டும் ஆட்சியை நடத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மக்களின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் தவெக அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள் என்றும் திண்டுக்கல் லியோனி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / LOGESHWARI V