முதலமைச்சருக்கு அரோகராவா? இது ஆணவத்தின் உச்சம் - கீதா ஜீவன் கண்டனம்
தூத்துக்குடி, 16 நவம்பர் (ஹி.ச.) திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது முருகப்பெருமானுக்கு எழுப்பப்படும் பக்தி முழக்கங்களுக்குப் பதிலாக, தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் பெயர்களைச் சேர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கு திமுக முன்னாள்
Geetha jeevan


தூத்துக்குடி, 16 நவம்பர் (ஹி.ச.)

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது முருகப்பெருமானுக்கு எழுப்பப்படும் பக்தி முழக்கங்களுக்குப் பதிலாக, தமிழக முதல்வர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் பெயர்களைச் சேர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டதற்கு திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

அப்போது பேசிய அவர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரத்தின்போது வழக்கமாக 'அரோகரா, கந்தனுக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கங்களே ஒலிக்கும். ஆனால், இந்த ஆண்டு முதல்வருக்கும் அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா எனக் கோஷமிட்டிருப்பது இதுவரை இல்லாத புதிய நடைமுறை என்று விமர்சித்தார்.

தனக்கு 55 வயதாகும் நிலையில், இதுபோன்ற முழக்கங்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்றும், தவெக ஆட்சியில் புதிய கலாசாரம் உருவாக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இறைவனுக்கு இணையாக அரசியல் தலைவர்களையும் அமைச்சர்களையும் புகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் தெரிவித்தார்.

மேலும், கந்த சஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் மிகுந்த சிரமத்துடன் கோயிலில் இடம்பிடிப்பார்கள். வசதி படைத்தவர்கள்கூட பக்தியுடன் விரதமிருந்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காகக் காத்திருப்பார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த நிகழ்வில் அரசியல் சார்ந்த முழக்கங்கள் எழுப்பப்படுவது பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

இதனுடன், நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்குப் போதிய அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். வயதான பக்தர்கள் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பலரால் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்குக்கூட அனுமதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால், தவெகவினர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நிகழ்வில் பங்கேற்றதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, முதல்வருக்கு அரோகரா என முழக்கமிட்ட விவகாரம், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / LOGESHWARI V