Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)
டெல்லியில் நடைபெற்ற ஏஎன்ஐ (ANI) தேசிய பாதுகாப்பு உச்சி மாநாடு 3.0 நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்,
எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள இந்தியா தற்சார்பு தொழில்நுட்பத்தையும், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அப்போது அவர், இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ எடுத்துக்காட்டியதாகக் குறிப்பிட்டார்.
இந்திய விமானப்படையின் ஒருங்கிணைந்த வான் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான ஐஏசிசிஎஸ் (IACCS), இந்திய ராணுவத்தின் ஆகாஷ்தீர் அமைப்பு ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த வான்வெளி கண்காணிப்புப் படத்தை உருவாக்கின என்று தெரிவித்தார்.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்ட இந்தியத் தொழில்நுட்பங்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்புத் துறையில் பிற நாடுகளின் தொழில்நுட்பங்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்றும், எதிர்காலப் போர்களுக்கான தயார்நிலையும் தற்சார்பு உற்பத்தியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் போர் தயார் நிலை மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என அவர் விளக்கினார்.
அதன்படி, சொந்தமாக உருவாக்கிய பாதுகாப்பு அமைப்புகளைக் கட்டுப்படுத்தும் திறன், அவற்றைத் தொடர்ந்து பராமரித்து இயக்கும் ஆற்றல், எதிரிகளைவிட வேகமாகப் புதிய சூழல்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் திறன் ஆகியவை முக்கியமானவை என்றார்.
இந்த மூன்றிலும் தற்சார்பு உற்பத்தி முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அது வெறும் முழக்கமல்ல; நாட்டின் போர் தயார்நிலைக்கான அடித்தளம் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, எதிர்காலப் போர்களை எதிர்கொள்வதற்கான இந்திய விமானப்படையின் அணுகுமுறையை ‘வாயு’ (VAYU) என்ற ஆங்கிலச் சுருக்கத்தின் மூலம் அவர் விளக்கினார்.
இதில் ‘V’ என்பது வெற்றிக்கான விழிப்புணர்வுடனும் எப்போதும் தயாராகவும் இருப்பதைக் குறிக்கிறது.
‘A’ என்பது தற்சார்பு உற்பத்தியையும், ‘Y’ என்பது சிந்தனை, நடைமுறைகள் மற்றும் கட்டமைப்புகளில் புதுமைகளைப் புகுத்துவதையும் குறிக்கிறது.
‘U’ என்பது முப்படைகள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பைக் குறிக்கிறது எனத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையுடன் இணைந்து செயல்படுமாறு தொழில் நிறுவனங்களுக்கும், புதிய யோசனைகளுடன் முன்வருமாறு கண்டுபிடிப்பாளர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்திய விமானப்படை எப்போதும் விழிப்புடனும், தயார் நிலையிலும், உறுதியுடனும் செயல்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
Hindusthan Samachar / LOGESHWARI V