எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள இந்தியா தயார்- முப்படை தலைமைத் தளபதி அதிரடி!
புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.) டெல்லியில் நடைபெற்ற ஏஎன்ஐ தேசிய பாதுகாப்பு மாநாடு 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜா சுப்பிரமணி, எதிர்காலப் போர்களுக்கான இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்ற
Raja subramani


புதுடெல்லி, 16 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியில் நடைபெற்ற ஏஎன்ஐ தேசிய பாதுகாப்பு மாநாடு 3.0 நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜா சுப்பிரமணி, எதிர்காலப் போர்களுக்கான இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலை, உள்நாட்டு ஆயுத உற்பத்தி மற்றும் முப்படைகளின் ஒருங்கிணைப்பு குறித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

எதிர்காலப் போர்களை எதிர்கொள்ள இந்தியாவிடம் மூன்று முக்கிய பலங்கள் உள்ளன. முதலாவதாக, முப்படைகளுக்கும் கிடைத்துள்ள செயல்பாட்டு அனுபவம் நமது மிகப்பெரிய பலமாகும்.

இரண்டாவதாக, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்படும் பெரும்பாலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி 80 நாடுகளுக்கு ரூ.38,000 கோடியை எட்டியுள்ளது.

மூன்றாவதாக, எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தெளிவான தொலைநோக்குப் பார்வை நம்மிடம் உள்ளது.2047-ம் ஆண்டுக்கான பாதுகாப்புப் படைகளின் தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் எத்தகைய இலக்குகளை அடைய வேண்டும் என்பதற்கான தெளிவான செயல்திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பாதுகாப்புத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டிய முக்கிய நடவடிக்கையாகும். இந்திய ஆயுதங்களைக் கொண்டே இந்தியாவின் போர்களை எதிர்கொள்ளும் திறன் நம்மிடம் இருப்பதை இந்த நடவடிக்கை நிரூபித்தது.

முப்படைகளின் கூட்டு திட்டமிடல் மற்றும் பல்வேறு களங்களில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனுக்கு இது சிறந்த உதாரணமாக அமைந்தது.

குறிப்பாக, ஆகாஷ் உள்ளிட்ட உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க உதவின.

மேலும், பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களின் பங்களிப்பும், முப்படைகளுக்கும் உற்பத்தித் துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பும் அதிகரித்துள்ளன.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ரகசியத் திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆபரேஷன் சுதர்சன் சக்ரா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம் நாட்டுக்கு வலுவான தற்காப்புக் கவசத்தை உருவாக்குவதுடன், நீண்ட தொலைவு துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களின் திறனையும் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு முப்படைகளின் தலைமைத் தளபதி ராஜா சுப்பிரமணி தெரிவித்தார்.

Hindusthan Samachar / LOGESHWARI V